முள்ளிவாய்க்கால் போரின் 14 ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் காஞ்சி காச்சி வழங்குவதும் இன அழிப்பின் வாகன பேரணி முன்னெடுக்கும் நிகழ்வும் கட்சிகள் அமைப்புகள் தமிழ் இன உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன அழிப்பின் வெளிப்பாட்டைக் கொண்டு வரும் நோக்கில் தமிழின உணர்வாளர்களால் வாகன பேரணி ஒன்று முள்ளிவாய்க்கால் கப்பல் அடி கடற்கரையிலிருந்து நேற்றைய தினம் 12.05.23 தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக முல்லைத்தீவு மாவட்டவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை முன்பாக ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கி தொடர்ந்து வாகனச்சுடர் பேரணியை தொடக்கி வைத்தார்கள்.
இலங்கை அரசாங்கம் தமிழின அழிப்பை மேற்கொண்டு விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதன் நினைவாக கொடி ஏற்றி கொண்டாடிய முள்ளிவாய்க்கால் கப்பலடி பகுதியில் இன அழிப்பின் சாட்சியமான வாகன சுடர் பேரணி தமிழின உணர்வாளர்களால் கடற்கரை மண்ணில் உறுதி எடுக்கப்பட்டு சுடரேற்றி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ் பற்றாளர்கள் உணர்வாளர்களால் உந்துருளி பவணியும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை தாங்கிய வாகன பேரணியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரப்பகுதி முள்ளியவளை ஒட்டி சுட்டான் ஊடாக வவுனியா மாவட்டத்தை நேற்றைய தினம் சென்றடைந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் மற்றும் அமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றமை காணக்கூடியதாக இருக்கின்றது.
எதிர்வரும் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவின் 14ஆம் ஆண்டு நினைவு கூறப்பட உள்ள நிலையில் எழுச்சி வாரமாக தமிழ் இன உணர்வாளர்களால் தமிழின அழிப்பை வெளிப்படுத்தி நோக்கில் தமிழர்களின் இன அழிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும் நோக்கிலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media