தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து மிளகாய்த் தூளைத் தூவி அடித்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது 6 வயது மகனையும் 7 வயது மகளையும் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தந்தை நேற்று (02) இரவு ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்திரவதைக்கு உள்ளான இரண்டு குழந்தைகளும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன், குடாகம, சமகி மாவத்தையைச் சேர்ந்த சந்தேக நபர், ஹட்டன் டிக்கோயா நகரசபையில் சுகாதாரப் பணியாளராக கடமையாற்றி வந்ததாகவும் மதுவுக்கு அடிமையான அவர், மது போதையில் தொடர்ந்து மனைவி மற்றும் பிள்ளைகளை சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சித்திரவதைக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளையும் சந்தேகநபரான தந்தை நேற்று (02) வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு அனுப்பி உள்ளதாகவும், இதன்போது தந்தை கூறிய பொருட்களுக்கு மேலதிகமாக விறகு கட்டு ஒன்றை வாங்கியதற்காக கோபமடைந்த தந்தை, பிள்ளைகளை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்துள்ளார்.
பிரதேசவாசிகள் குறித்த இரு சிறுவர்களையும் மீட்டு ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, ஹட்டன் பொலிஸார் நேற்று (02) இரவு இரண்டு பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் தனது மனைவியை இவ்வாறு தாக்கியதாகவும் குழந்தைகளை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்ததாகவும் ஹட்டன் பொலிஸாரால் இதற்கு முன்னர் பல தடவைகள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவனின் சித்திரவதையை தாங்க முடியாத மனைவி, கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (03) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், சிறுவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Follow on social media