உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 66-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
அதேசமயம், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
குறிப்பாக, ஹார்சன், டான்பாஸ்க் உள்ளிட்ட பகுதிகள் ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஹார்சன் மாகாணத்தில் ரூபிள் பணம் அதிகாரப்பூர்வ பணமாக அறிமுகப்படுத்தப்படும் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை முன்னதாக, போர் தொடங்கியபோது உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றுவது நோக்கம் அல்ல, உக்ரைனின் ராணுவ பலத்தை அழிப்பது மட்டுமே நோக்கம் என ரஷியா அறிவித்திருந்த நிலையில் தற்போது கைப்பற்றிய பகுதிகளில் தங்கள் நாட்டு பணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பகுதிகளை முழுவதும் தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டுவர ரஷியா திட்டமிட்டுள்ளமை உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media