ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற போராட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த நான் தான் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்னையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று (23-04-2022) வெள்ளிக்கிழமை கேகாலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, சிதாவக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசாரணைக் குழுவினர், சம்பவம் தொடர்பில் இதுவரை 51 பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளையும் குழுவினர் நீதிமன்றில் சமர்பித்தனர்.
போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த கேகாலை பொலிஸ் நிலையத்தினால் ஒவ்வொரு ஆயுதத்திற்கும் தலா 30 தோட்டாக்கள் கொண்ட நான்கு டீ 56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த ஆயுதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முயற்சித்தவரை கண்டுபிடிக்க முடியுமா என நீதவான் வினவிய போது, குறித்த நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் பதிலளித்தனர்.
நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளித்த கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
எரிபொருள் தாங்கி ஊர்தியின் பாதையை மறித்து அதற்கு அருகில் இருந்த போராட்டம் செய்தவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீச உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைக்க முயன்றபோது, முதலில் பொலிஸாரை வானத்தை நோக்கிச் சுடுமாறும், பின்னர் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீவைக்க முயன்ற எதிர்ப்பாளர்களுக்கு பெரும் சேதத்தைத் தடுக்கும் வகையில் முழங்காலுக்குக் கீழே சுடுமாறும் தாம் கட்டளையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சமிந்த லக்ஷனின் மரணம் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் நடைபெறும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையினபோது நேற்று பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மனித உரிமை ஆணையாளர் நிமல் கருணாசிறி இதனை தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் உறுதியளித்தார் என்றும் நிமல் கருணாசிறி கூறினார்.
Follow on social media