தலையில் ஏற்படும் பெரும் பிரச்னைகளில் ஒன்று பொடுகுப் பிரச்னை ஆகும் . இறந்த செல்கள், தலையை சுத்தமாகப் பராமரிக்காதது போன்ற வெளிப்புறக் காரணிகளுடன், ஹார்மோன் சமச்சீரின்மையின் வெளிப்பாடு, தீவிர சருமப் பிரச்னைகள் போன்ற உடல்நலக் காரணிகளும் பொடுகை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது.
உடல்நலக் காரணிகளுக்கு மருத்துவ சிகிச்சை முறையிலேயே தீர்வு காண இயலும். எனினும் பராமரிப்பின்மை உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட சில எளிய முறைகள்,
தலைக்கு நீராடல்:
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாள்கள் தலைக்கு குளிக்க வேண்டும். இது தலையில் உள்ள எண்ணெய்ப் பசையைக் குறைப்பதுடன், தலையை மாசுவில் இருந்து பாதுகாக்கும். பொடுகு குறைய வழிவகுக்கும்.
க்ரீன் டீ:
க்ரீன் டீ தூளை புதினா எண்ணையுடன் கலந்து கூடவே வெள்ளை வினிகரை சிறிதளவு சேர்ந்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை ஸ்கால்ப்பில் அப்ளை செய்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பின் சல்ஃபேட் இல்லாத ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இது தலையில் ஏற்படும் அரிப்பைக் குறைப்பதுடன், பொடுகுப் பிரச்னையில் இருந்து காப்பாற்றும்.
டீ ட்ரீ ஆயில்:
டீ ட்ரீ ஆயில் 10 துளிகள் எடுத்துக்கொண்டு அதனுடன் 5 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து இரவு நேரத்தில் ஸ்கால்ப்பில் தடவவும். பின் காலையில் எழுந்ததும் சில நிமிடங்களுக்கு மசாஜே செய்த பின் நன்றாகத் தலையை அலசவும். இது தலையில் உள்ள பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தவும், பொடுகுப் பிரச்னையை சரிசெய்யவும் உதவும்.
எலுமிச்சை:
இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை தலையில் தடவி இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். தொடர்ந்து, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் தண்ணீரில் கலந்து, தலைக்குக் குளித்து முடித்த பின்னர் இறுதியாக இந்தக் கலவையை கொண்டு தலையை அலசவும். இதேபோல தொடர்ந்து செய்துவர பொடுகு கட்டுப்படுத்தப்படும். எலுமிச்சை பழத்தில் உள்ள ஆசிட் பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழிக்கும்.
மன அழுத்தம்
உடல் நலத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மனநலம்தான். தலையில் பொடுகு ஏற்படுவதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணமாகலாம். அதனால் மனதின் இறுக்கங்கள் தளர்த்தி அமைதியாக இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
Follow on social media