மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியில் இருந்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து 75 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு அகதிகாளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு பைப்பர் படகில் புறப்பட்ட வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் திங்கள் கிழமை அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பால்மாவு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

எனக்கு இரண்டு மாத கை குழந்தை உள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து பால்மாவு வாங்கி என் குழந்தைக்கு எப்படி கொடுக்க முடியும்?, குழந்தைக்கு செலுத்தும் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு இல்லை, தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் 6 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.

என் கணவருக்கு போதிய வருமானம் இல்லை இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும் எனவே உயிரை காப்பாற்றி கொள்ள இரண்டு மாத கை குழந்தையுடன் கடலில் அபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழ் பெண் லதா தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்கு பின் இந்த 5 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting