ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதிக்க முடியாது – லண்டன் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே (49) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனராவார். இவர், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா செய்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பிற நாடுகளை உளவு பார்த்தது தொடர்பான ராணுவ ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் 2010-ம் ஆண்டு வெளியிட்டார்.

குறிப்பாக, ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய கோரத் தாண்டவம், அரசியல் கைதிகளை அடைக்கும் குவாண்டனமோ சிறைச்சாலை உள்ளிட்ட தகவல்கள் உலகையே அதிர வைத்தன.

இது ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா 18 கிரிமினல் வழக்குகளை தொடர்ந்தது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் உளவாளி என்றும் அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்கிடையில் ஜூலியன் அசாஞ்சே வாழ்ந்து வந்த சுவீடன் நாட்டில் அவருக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா சுவீடனை வலியுறுத்தியது.

இப்படி தொடர்ந்து நெருக்கடி முற்றிய காரணத்தால் ஜூலியன் அசாஞ்சே சுவீடனில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அங்கு அவர் லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் 2012-ம் ஆண்டில் தஞ்சமடைந்தார். ஆனாலும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக 2019-ம் ஆண்டு ஈகுவடார் அரசு அவரை கைவிட்டது.

அதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஈகுவடார் தூதரகத்துக்குள்ளே நுழைந்த லண்டன் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

அதன் பிறகு, தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார் ஜூலியன் அசாஞ்சே. இதையடுத்து கைதான ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது.

உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இருதரப்புக்கும் இடையே பலகட்டங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் லண்டன் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், இங்கிலாந்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த லண்டன் கோர்ட்டு அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், மன ரீதியில் பிரச்சனைகள் ஏற்பட்டு ஜூலின் அசாஞ்சே தற்கொலை செய்யவும் வாய்ப்பு உள்ளதால் நாடுகடத்தும் நடைமுறைக்கு தடை விதிக்கப்படுவதாக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நாடு கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளபோதும், அசாஞ்சே தொடர்ந்து லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையிலேயே அடைக்கப்படுவார் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அசாஞ்சே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்தவாரம் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், அசாஞ்சேவை நாடு கடத்தக்கூடாது என லண்டன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து அமெரிக்கா மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.