வடக்கின் பெரும்போர் பெருந்து துடுப்பாட்டப் போட்டியில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் பெரு வெற்றி பெற்றது. இதன் மூலம் வடக்கின் பெரும் போர் போட்டியில் 38ஆவது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கிறது.
வியாழக்கிழமை ஆரம்பமான 115ஆவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்ததது.
முதலில், துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களையும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 125 ஓட்டங்களையும் முதல் இனிங்ஸில் எடுத்திருந்தன.
நேற்று இரண்டாவது நாள் போட்டி முடிவடையும்போது சென். ஜோன்ஸ் கல்லூரி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சபேசன் 45, அஸ்நாத் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாவது மற்றும் இறுதிநாளான இன்று சனிக்கிழமை சபேசன், அஸ்நாத் இணை தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. சபேசன் தொடர்ந்து அதிரடியாக நேற்றைய நாளிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இதனிடையே மெதுவாக ஆடிய அஸ்நாத் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அபிஷேக் சபேசனுடன் இணைந்து அதிரடி காட்டவே சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென்று உயர ஆரம்பித்தது. இதனிடையே, அதிரடி காட்டிய சபேசன் 116 பந்துகளில் 9 பௌண்ட்ரிகள், 5 சிக்ஸர்களை விளாசி சதம் அடித்தார். அவர் 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து 3 பௌண்ட்ரிகளுடன் 22 ஓட்டங்களை எடுத்த அபிஷேக்கும் ஆட்டமிழக்கவே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 67 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி மத்திய கல்லூரியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் நியூட்டன் 3 விக்கெட்களையும் கௌதம், கஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
262 இலக்கு என்ற கடினமான இலக்கை நோக்கி இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது மத்திய கல்லூரி அணி.
அபிலாஷ், விதுசன் இணை தொடக்கம் கொடுத்தது. சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சை சமாளிக்க மாட்டாமல் திணறியது இந்த இணை. இதனால், விரைவாகவே இரு விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. விதுசன் ஓட்டம் எதையும் பெறாமலே கஜகர்ணனின் பந்திலும், அபிலாஷ் 3 ஓட்டங்களுடன் விதுசனின் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த நியூட்டன் 10, கௌதம் ஓர் ஓட்டம் என ஆட்டமிழந்தனர். எனினும், ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த கஜன், அணித்தலைவர் சாரங்கன் இணை பொறுப்பாக ஆடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். இதையடுத்து மத்திய கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கை சற்று உயர ஆரம்பித்தது.
அபாரமாக ஆடி 5 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் அரைச்சதம் கடந்த கஜன் 53 ஓட்டங்களுடன் ஐந்தாவது விக்கெட்டாக வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து, அணித் தலைவர் சாரங்கன் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்கவே, அடுத்து வந்த அஜய் 2, கவிதர்சன் 0, சஞ்சயன் 27, சயந்தன் 17 என விக்கெட்கள் இழக்கப்பட்டன.
62.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 163 ஓட்டங்களையே பெற்றது.
பந்துவீச்சில் அசத்திய சென். ஜோன்ஸ் கல்லூரியின் அஸ்நாத் 6 விக்கெட்களையும், விதுசன், கஜகர்ணன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
Follow on social media