குடும்ப நண்பரை இழந்து விட்டேன் – ராதாரவி வேதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ராதாரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமார் நேற்று இரவு 6.56 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராதாரவி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுப்படுத்தும். அந்தளவுக்கு தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். மேலும் அவர் எனக்கு தயாரிப்பாளரும் கூட, அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.

தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு புன்னகையுடனே இருந்தவர். இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படி காண்பேன்.

பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண்ணன் மகளும் மேதகு தெலுங்கான மாநில ஆளுநருமான திருமதி தமிழிசை செளந்தரராஜன், மகன்கள் விஜய்வசந்த், வினோத்,
மகள் தங்க மலர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வசந்த் அண்ட் கோ ஊழியர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting