வாழ்நாள் கணிதத்துறை பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமான பேராசிரியர் தர்மரத்தினம் அவர்கள், விஞ்ஞானபீட பழைய மாணவர்கள் குழும (FOSAA ) நிர்வாகிகளால் நடாத்தப்படும் விஞ்ஞான பீடத்தின் 50வது ஆண்டு விழாவில் தன்னால் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள முடியாது என்று இன்று அறிவித்திருக்கிறார்.
ஏனெனில், FOSAA ஆனது துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா மற்றும் விஞ்ஞான பீடாதிபதி ரவிராஜன் ஆகியோரால் செய்யப்படும் ஊழல் முறைகேடு, நிதித்துஷ்பிரயோகம் மற்றும் விரிவுரையாளர்களுக்கெதிரான பாராபட்சமான நியாயமற்ற பழிவாங்கல்களை வெள்ளையடிக்க முயற்சிக்கிறது, கணக்காய்வு திணைக்கள நாயகத்தாலே உறுதிப்படுத்தப்பட்ட பெரும்தொகை நிதிக்கையாடல்களை மறைக்கப் பயன்படுகின்றது என தனது முடிவுக்குக் காரணம் தெரிவித்திருக்கின்றார். தன்னை சாட்சியாக வைத்து ஒரு போலித்தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருக்கவும், ஊழல் குற்றங்களுக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்களுக்கு சமனாக தான் ஒரே மேடையில் இருக்க விரும்பாமலும் தான் தான் இந்த முடிவை எடுத்தார் என்றும் அறிவித்துள்ளார் எல்லாராலும் மதிக்கப்படும் பேராசிரியர் தர்மரத்தினம் அவர்கள்.
இதனை விட, இரசாயனவியல்துறை பேராசிரியரும் இன்னொரு முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் பிரின்ஸ் அவர்களும், தான் அநீதிக்கெதிராகக் குரல் கொடுப்பதால் வேண்டுமென்றே தன்னை முறையாக அழைக்காமல், மற்றைய பீடாதிபதிகளுக்கு கொடுக்கும் அடிப்படை மரியாதையைக்கூடக்கொடுக்காமல் FOSAA வேண்டுமென்றே அவமானப்படுத்துவதால் தானும் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
விஞ்ஞானபீட பழைய மாணவர்கள் குழுமம் (FOSAA) என்பது முழு பழைய மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதும் அண்மைய இரு மாதங்களில் தான் தற்போதய பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இன்னமும் விசுவாசமாகவுள்ள சில பழைய மாணவர்கள் அவசரம் அவசரமாக சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுமம் தற்போதைய பீடாதிபதி ரவிராஜனின் நலன்களை பேணுவதற்காகவும் அவரை அடுத்த துணைவேந்தராக்குவதற்காகவும் அவரின் விசுவாசிகள் சிலரால் கடந்த ஒருவருடமாக மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow on social media