அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக் கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச் சந்தை முன்பதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் தற்போதைய நீதி அமைச்சர், அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்ற கருத்து மிகவும் மோசமானது. தமிழ் அரசியல் கைதிகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தண்டனை விதிக்கப்படாதவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய முடியும்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் , வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து வடக்கு, கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே, இந்த ஆட்சியாளர்கள் கையெழுத்துப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், பரந்துபட்ட போராட்டத்துக்கான அறைகூவலை நான் விடுக்கின்றேன் என்றார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting