மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேருக்கு ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை புற்றுநோய் மருத்துவ சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட பல்வேறு அமைப்புகள் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்கியது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த பேரணியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் கே.சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.கலாரஞ்சனி உட்பட வைத்தியர்கள்,வைத்திய துறை சார்ந்தர்கள்,புற்றுநோய் சங்க மட்டக்களப்பு கிளை உறுப்பினர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியானது மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் வரையில் சென்றதுடன் இதன்போது புற்றுநோய் தொடர்பான பல்வேறு பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் புற்றுநோயை கட்டுப்படுத்த,தவிர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகள் கொண்ட துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
முட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் புற்றுநோய் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலத்தில் இலங்கையில் ஏற்படும் மரணங்களில் முதல் இடத்தினை புற்றுநோய் கொண்டிருக்கும் நிலையேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதாகவும் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
துற்போதைய பொருளாதார நெருக்கடியினால் புற்றுநோய்க்கான மருந்துகளைப்பெற்றுக்கொள்வதில் மக்கள் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறான விழிப்புணர்வுகள் மூலம் முற்றுநோயின் தாக்கம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Follow on social media