யாழில் நகைக்கடைக் கொள்ளை – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்த இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 39 – 50 வயதுக்குட்பட்ட மஹய்யாவ, கட்டுகஸ்தோட்டை, பத்தேகம மற்றும் மணிக்கின்ன ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.

திருடப்பட்ட பணத்திலிருந்து 2 மில்லியன் ரூபா தொகையை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடைக்குள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எனக் கூறி சந்தேகநபர்கள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் குறித்த கடை உரிமையாளரிடம் இருப்பதாக அவர்கள் போலி பிடியாணையை முன்வைத்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன், நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக தங்கம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனக் கூறி உரிமையாளரை வற்புறுத்தி ரூ. 3 மில்லியன் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்றவிசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி கலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பிரதான சூத்திரதாரி சுன்னாகம் பகுதியில் 17 ஆம் திகதி ஜந்து இலட்சம் ரூபாய் பணத்துடன் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், கொழும்பில் வைத்து இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting