ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு” எனும் தலைப்பின் கீழ் இன்று காலை முதல் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரித்தல், வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை எதிர்த்தல், கடல் உணவு இறக்குமதியை எதிர்த்தல், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் கடற்றொழிலாளர்களுக்கு போதுமான ஒதுக்கீடு இன்மை மற்றும் இந்திய இழுவைமடி படகுகளால் பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுத் தரவேண்டும் போன்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடற்றொழில் சமூகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடற்றொழில் சமூகத்தை தொடர்ந்தும் பாதிக்கும் அரச கொள்கைகளை கைவிடுமாறு கோரி மகஜரொன்றையும் கையளிப்பதாகவும் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
Follow on social media