கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2 மகன்களுடன் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வருவதும், அதனால் பிரிவதும் ஏழை, பணக்காரன் உள்பட எல்லா தரப்பு மக்களிடமும் பொதுவாக காணப்படுவதுதான்.
ஆனால் பிரபலங்களாக இருக்கும் தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரியும் போது அது மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்தது நேற்று பல்வேறு தரப்பினரிடம் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது.
அதற்கு காரணம் தனுசும், ஐஸ்வர்யாவும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருகி உருகி காதலித்ததுதான். நடிகர் தனுஷ் நடித்த 2-வது படமான காதல் கொண்டேன் படம் 2003-ம் ஆண்டு வெளியான போது அதில் அவர் சிறப்பாக நடித்திருப்பதாக கூறி ஐஸ்வர்யா பூங்கொத்துகளை அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு தனுஷ் போனில் ஐஸ்வர்யாவை அழைத்து நன்றி தெரிவித்தார். இப்படி அறிமுகமான அவர்கள் அதன்பிறகு தினசரி பேசி, பழகியதால் நண்பர்கள் ஆனார்கள். நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
அவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த போது இரு வீட்டிலும் சற்று தயங்கினார்கள். தனுசை விட ஐஸ்வர்யா 2 வயது மூத்தவர் என்பதால் அந்த திருமணம் சரியாக இருக்குமா என்று நினைத்தார்கள். ஆனால் தனுசும், ஐஸ்வர்யாவும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் 2004-ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
2006-ம் ஆண்டு முதல் குழந்தை யாத்ரா, 2010-ல் 2-வது குழந்தை லிங்கா பிறந்தனர். 2020-ம் ஆண்டு வரை அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாகவே சென்று கொண்டு இருந்தது. அதன்பிறகுதான் அவர்களின் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
நடிகர் தனுஷ் இந்தி படங்களில் நடிக்க தொடங்கியவுடன் அவர்களின் கருத்து வேறுபாடு அதிகரிக்க தொடங்கியது. மற்ற நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகியதால் ஐஸ்வர்யா கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2 மகன்களுடன் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
தனுஷ்- ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை முடிவுக்கு கொண்டுவர உறவினர்களும், நண்பர்களும் கடந்த சில மாதங்களாக ஓசையின்றி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். இருவரையும் அழைத்து பேசினார்கள். ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.
தனுசின் சகோதரர் டைரக்டர் செல்வராகவன் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், ‘கோபத்தில் இருக்கும்போது தயவு செய்து எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். 2 நாட்களுக்கு அமைதியாக விட்டு விடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். சரியானபடி ஓய்வு எடுங்கள்.
2 நாட்களுக்கு பிறகு உங்களிடையே ஏற்பட்ட பிரச்சினை தானாகவே மறைந்துவிடும். அல்லது பிரச்சினைக்கு சரியானபடி தீர்வு காண்பதற்கான மனநிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்” என்று கூறி இருந்தார்.
தனுஷ்-ஐஸ்வர்யாவை சமரசம் செய்யும் வகையில் இந்த பதிவை அவர் வெளியிட்டு இருந்தார். ஆனால் இதற்கும் பலன் கிடைக்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு முதலில் தனுசும், பிறகு ஐஸ்வர்யாவும் அடுத்தடுத்து தாங்கள் பிரிவதாக டுவிட்டர் பதிவை வெளியிட்டபோது அவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தனுசையும், ஐஸ்வர்யாவையும் சமரசம் செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தனுஷ் தற்போது ஐதராபாத்தில் வாத்தி படப்பிடிப்பில் இருக்கிறார். அவரை தொடர்பு கொண்டு உறவினர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் தனுஷ் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் அவரிடம் தொடர்ந்து பேசி அவரது முடிவை மாற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.
ஐஸ்வர்யாவை பொறுத்தவரை தனது பாதையில் தொடர்ந்து பயணிக்க தீர்மானமாக மன உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீண்டும் தனுசுடன் சேர்வது சந்தேகம்தான் என்று அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் கருதுகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே தனுஷ்- ஐஸ்வர்யா இடையே அதிருப்தி நிலவியதை அவரது நண்பர்கள் நன்கு அறிவார்கள். தனுஷ் பல்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் அவரை நெருங்க முடியாத நிலையில் அவரது தோழர்களும் உள்ளனர்.
ஐஸ்வர்யா தினமும் யோகா, உடற்பயிற்சிகள் செய்யும் வழக்கம் கொண்டவர். தனது தந்தையை போன்றே ஆன்மிகத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. எனவே தொடர்ந்து ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்ட அவர் தீர்மானித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ள போதிலும் சட்ட ரீதியாக பிரிவார்களா என்பதில் எந்த உறுதியான தகவலும் இல்லை. அந்தளவுக்கு போக மாட்டார்கள் என்று இரு குடும்பத்து உறவினர்களும், நண்பர்களும் கருதுகிறார்கள்.
யாத்ரா, லிங்கா இருவரும் தற்போது ஐஸ்வர்யாவின் பராமரிப்பில் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் ஐஸ்வர்யாவே வளர்ப்பார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
அடுத்தடுத்து நடத்தப்படும் சமரச முயற்சிகளில் தனுஷ்- ஐஸ்வர்யா மனதில் மாற்றம் ஏற்பட்டால் இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரம் நேற்றும், இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தனுஷ் ரசிகர்கள் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.
அதே போன்று ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் இடப்படுகின்றன.
இதற்கிடையே ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடுகிறார்கள். அவர்கள் ரஜினி தைரியமாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow on social media