கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள மதுபான சாலையில் கைக்கலப்பில் ஈடுபட்டவர்கள், வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மதுபான சாலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திக் கொண்ட இரு தரப்பினர்கள் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து, மதுபான சாலை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் அங்கு விரைந்த போது, கைக்கலப்பில் ஈடுபட்டிருந்த நபர்கள், பொலிஸாரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
தப்பி சென்றவர்களில் ஒருவர் , வீதியில் பயணித்த முச்சக்ர வண்டியை மறித்து, அதன் சாரதியை தாக்கி விட்டு, முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து அதில் தப்பி சென்றுள்ளார்.
தப்பி சென்றவர்களில் ஏனையவர்களில் இருவரை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கைக்கலப்பில் காயமடைந்த நிலையில் காணப்பட்டமையால், அவரை பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மற்றையவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை வீதியில் சென்ற தன்னை வழிமறித்து தாக்கி, தனது முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் என முச்சக்கர வண்டி சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ள நிலையில் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow on social media