விகாரைக்குள் மறைத்து வைக்கப்பட்ட இந்துக் கோயில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அது முற்றிலும் பெளத்த மக்கள் வாழும் ஓர் பிரதேசத்தின் மத்தியில் இருந்த பெளத்த விகாரைக்குள், இலங்கையில் எங்கும் காணக் கிடைக்காத அழகிய வடிவத்துடன் அமைக்கப்பட்டிருந்த ஓர் சோழர்கால இந்துக் கோயில்.

குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்பொடகல என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் ரிதிகம என்னுமிடம் உள்ளது. இங்குள்ள சிறிய மலைப்பாறையின் மீது ரிதிவிஹாரை அமைந்துள்ளது.

மலைப்பாறையின் உச்சிப் பகுதிக்குச் சென்றவுடன் அங்கு பெளத்த விகாரை, தூபி போன்றவை காணப்படுகின்றன. இவற்றின் அருகில் அழகிய இந்துக் கோயில் ஒன்றும் காணப்படுகிறது.

கருங்கல்லினால் அழகிய வடிவில் செதுக்கப்பட்டுள்ள எட்டுத் தூண்களுடன் கூடிய, சிறிய மண்டபமொன்றும் அதை அடுத்து கருவறையும் காணப்படுகிறது. இவை முற்றிலும் திராவிடக் கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.

கூரையும் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. பொ.ஆ.11ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இக்கோயில் அமை க்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இலங்கையில் இன்றும் பேணப்பட்டுள்ள முழுமையாகவே கல்லினால் கட்டப்பட்ட, விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரண்டு கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது இக்கோயில் “வரக்கா வெலந்து விஹாரை” என அழைக்கப்படுகிறது. இப்பெயர் இக்கோயிலுக்கு வந்ததற்கு விசித்திரமான ஓர் கதையும் கூறப்படுகிறது. இவ்விடத்தில் அனுராதபுர காலத்தில் இந்திரகுப்தன் எனும் பிரதானி பலாப்பழம் விற்பனை செய்தானாம்.

அதனால் இக்கோயிலுக்கு இப்படி ஒரு பெயர் வந்ததாம். எல்லாள மன்னன் காலத்தில் இப்பகுதியில் இந்து சமயம் மேலோங்கிக் காணப் பட்டிருக்கலாம் என நம்பக் கூடியதாக உள்ளது.

ஏனெனில் எல்லாள மன்னனை வென்று, பொ.ஆ.மு. 101-77 வரை இலங்கையை ஆட்சி செய்த துட்டகைமுனு இங்கு ரிதிவிஹாரை எனும் பெளத்த வழிபாட்டுத் தலத்தை அமைத்தான் எனவும், இந்த இடத்திற்கு முதன்முதலாக துட்டகைமுனு சென்ற போது 500 பெளத்த பிக்குகளையும், 1500 இந்து பிராமணர்களையும் அழைத்துச் சென்றான் எனவும் இங்குள்ள பழமை வாய்ந்த ஓலைச்சுவடி ஒன்றில் எழுதப் பட்டுள்ளது.

பிக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாக பிராமணர்கள் இங்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப் பிடத்தக்கது. இதன்படி ரிதிகம பகுதி பெளத்தர்களை விட இந்துக்களின் செல்வாக்கு மிகுந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என யூகிக்கக் கூடிய தாக உள்ளது.

எல்லாளன் காலத்தில் இப்பகுதி பிராமணர்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்த இடமாக இருந்திருக்க வேண்டும். அக்கால கட்டத்தில் இங்கு இந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே சோழர் காலத்தில் இங்கு கற்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply