திருமண ஆசைகாட்டி 60 வயதான நபரிடம் 3 லட்சம் பணத்தை சுருட்டிய பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

திருமண ஆசைகாட்டி 60 வயதான நபரிடம் சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய பெண் தலைமறைவான சம்பவம் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

60 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர், தனது மகன் திருமணமாகி தனித்தனியாக வசிப்பதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் துணைக்காக வேறு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி நாளிதழ் ஒன்றில் வெளியாகிய திருமண விளம்பரத்தை பார்த்து

குருநாகல் பிங்கிரிய பகுதியில் உள்ள கிராமமொன்றுக்கு பெண் பார்க்க சென்றுள்ளார். அவர் பார்க்க சென்ற பெண் சுமார் 41 வயதுடையவர் எனவும்,

அவர் கணவனை விட்டு பிரிந்து சகோதரனுடன் வசித்து வரும் பெண் என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் விருப்பம் ஏற்படுள்ளது.

இதனால் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த மணமகள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, மனமகனிடம் முதல்முறையாக 15 ஆயிரம் ரூபாயை கேட்டுள்ளார்.

குறித்த நபரும் அவர் கேட்ட 15 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கவென மேலும் ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

சில நாட்களின் பின் அவர் மணமகளை சந்திக்கச் சென்றபோது தமக்குச் சொந்தமான வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும்,

குத்தகைதாரரிடம் இருந்து பெற்ற 45,000 ரூபாயை செலுத்தி வீட்டை மீட்டு எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதற்கும் 45 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். பின் ஒக்டோபர் 28 ம்திகதி மூன்றாவது முறையாக மணமகளை சந்திக்க சென்ற பெண் அன்றைய தினம் வீட்டிற்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ள 30,000 ரூபாய் தேவைப்படுவதாகவும்,

இருவரும் சேர்ந்து வாழும் போது, அதிக செலவுகள் ஏற்படும் அதனால் துணி தைக்கும் தொழில் தனக்கு தெரியும் அதற்கு தேவையான தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி தருமாறும் கேட்டுள்ளார்.

அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதற்கு, சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் என குறித்த மணமகள் கூறியுள்ளாள்.

அவரும் வருங்கால மனைவியான குறித்த பெண்ணை அழைத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் வங்கிக்குச் சென்று இரண்டு லட்சத்தைக் எடுத்து கொடுத்துள்ளார்.

தலையில் முடி அதிகம் வளர்ந்து விட்டதால் முடிவெட்டிக்கொண்டு வருமாறும், தான் வெளியில் காத்திருப்பதாகவும் குறித்த பெண் கூற அவரும் முடிவெட்ட சலூனுக்கு சென்றுள்ளார்.

முடிவெட்டிக் கொண்டு வெளியில் வந்து பார்த்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வெளியில் காத்திருப்பதாக கூறிய குறித்த பெண்ணையும் காணவில்லை, ஆட்டோவையும் காணவில்லை.

அப் பெண்ணின் தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றுவரை அப்பெண் தொடர்பில் எத்தகவலையும் அவ் 60 வயது மணமகனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சுமார் மூன்று இலட்சத்தை இழந்த அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply